இலவச காஸ் சிலிண்டர் திட்டம் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் 3 ஆயிரம் கோடி முதலீடு : 3000 பேருக்கு வேலைவாய்ப்பு

கவுகாத்தி: பிரதமரின் இலவச காஸ் சிலிண்டர் திட்டம் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் ₹3 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை(உஜ்வாலா) வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது குறித்து அசாம் மாநில பெட்ரோலிய பொருட்கள் ஒருங்கிணைப்பாளர் உதியா பட்டாச்சார்யா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமரின் உஜ்வாலா திட்டத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் ஆகியவை அமல்படுத்தின. இதனால் கடந்த 2017ம் ஆண்டு 48.3 லட்சமாக இருந்த வாடிக்கையார் எண்ணிக்கை தற்போது 94 லட்சமாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கமே வீடுகளுக்கு சுத்தமான எரிபொருள் வழங்குவததுதான். ஆனால் அதையும் தாண்டி, இத்திட்டதால் வடகிழக்கு பகுதிகளில் முதலீடும், வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.

ஐஓசி நிறுவனம் வடகிழக்கு மாநிலங்களில் 6 காஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களில் உற்பத்தி திறனை ₹149 கோடி செலவில் அதிகரித்துள்ளது. திரிபுராவின் அகர்தாலா, மேகலயாவின் பரபானி ஆகிய இடங்களில் 2020ம் ஆண்டுகள் 2 கிரீன்பீல்டு உற்பத்தி மையங்கள் ₹290 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளன. அசாமில் உள்ள பான்கைகான் சுத்திகரிப்பு மையத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ₹2500 கோடியை ஐஓசி முதலீடு செய்துள்ளது. காஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ₹100 கோடி முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் வடகிழக்கு மாநிலங்களில் ₹3 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: