திருவண்ணாமலையில் உலகத் திரைப்பட விழா: சினிமா மக்கள்சாதனமாக மாற வேண்டும்: இயக்குநர் கோபி நயினார் பேச்சு

திருவண்ணாமலை: சினிமா மக்கள் சாதனமாக மாற வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் திரைப்பட இயக்குநர் கோபி நயினார் பேசினார். திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், 6வது உலகத் திரைப்பட விழா செங்கம் சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கவுரவ தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். குழந்தைவேலு வரவேற்றார். பாப்பம்பாடி ஜமா பெரிய மேளத்தை இசைத்து, திரைப்பட விழாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். மேலும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், கிரிஷ்கர்னாட், மிருணாள்சென் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், ‘அறம்’ திரைப்பட இயக்குநர் கோபி நயினார் பேசியதாவது: இந்தியாவில் சினிமா எடுப்பது கஷ்டமான விஷயம். தயாரிப்பாளரிடம் கதை சொல்வதைவிட, கதாநாயகனிடம் கதை சொல்வது கஷ்டம். சினிமாவை அரசியல் மற்றும் அறிவியல்படுத்த வேண்டியது அவசியம்.  சினிமாவை மக்களுக்கு அறிமுகப்படுத்த, இதுபோன்ற திரைப்பட விழாக்கள் பயன்படுகிறது.

சமூகம் தன் சொந்த விடுதலைக்கான அரசியல் எழுச்சியை கலை வடிவில்தான் பெற முடியும். சினிமாவை அரசியல்படுத்தாமல் நாம் வெற்றிபெற முடியாது. சினிமா மக்கள் சாதனமாக மாற வேண்டும். கதாநாயகன் வழிபாட்டில் இருந்து சினிமாவை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நல்ல சினிமாவை அறிமுகப்படுத்த வேண்டியது சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களின் கடமை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கருணா, நாடகவியலாளர் பிரளயன், டூலெட் திரைப்பட நடிகை ஷீலா, திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார், திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 20ம் தேதி வரை நடைபெறும் விழாவில், மெக்சிகோ, அமெரிக்கா, தென்கொரியா, ஸ்பெயின், லெபனான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சினிமா திரையிடப்படுகிறது. மேலும், ஒவ்வொரு படமும் திரையிடல் முடிந்ததும், அது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டு பேசுகின்றனர். விழாவின் முதல் நாளான நேற்று, பல்வேறு விருதுகளை பெற்ற மலையாள மொழி திரைப்படம் ‘கும்பாலாங்கி நைட்ஸ்’, ஹங்கேரி நாட்டு படமான ‘கோல்டு வார்’, சுவீடன் நாட்டு படமான ‘சம்மர் வித் மோனிகா’, எகிப்து படமான ‘ஓமிடைன்’ ஆகியவை திரையிடப்பட்டன. 2ம் நாளான இன்று காலை 9.30 மணிக்கு அமெரிக்க நாட்டு படமான ‘நியூயார்க் பப்ளிக் லைப்ரரி’, மதியம் 2மணிக்கு ரஷ்ய நாட்டு படமான ‘லவ்லெஸ்’ திரையிடப்பட்டது.  மாலை 4.45மணிக்கு மெக்சிகோ நாட்டு படமான ‘ஐ ட்ரீம் இன் அனதர் லேங்குவேஜ்’, இரவு 7மணிக்கு இங்கிலாந்து நாட்டு படமான ‘ஐ டேனியல் பிளேக்’ ஆகியவை திரையிடப்படுகிறது.

Related Stories: