நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதான மாணவன், மாணவி, தாய் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி : மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என நீதிபதி கருத்து

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதான மாணவன் இர்பான், மாணவி பிரியங்கா, இவரது தாய் மைனாவதி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தேனி குற்றவியல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் மாவட்டம், வாணியம்பாடி மாணவர் இர்பான், தர்மபுரி மாணவி பிரியங்கா, இவரது தாய் மைனாவதி ஆகியோர் ஜாமீன் கோரி தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் குற்றவியல் நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று மதியம் விசாரணைக்கு வந்தன. மாணவி பிரியங்கா தரப்பு வக்கீல் வாதிடும்போது, ‘‘மாணவி பிரியங்கா பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர புரோக்கர் ரஷீத் மூலம் பணம் கொடுத்துள்ளார். புரோக்கர் ரஷீத், மாணவியை பிலிப்பைன்சில் சேர்க்காமல், சென்னை தண்டளத்தில் உள்ள சவீதா மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளார். எனவே இவருக்கும் இவரது தாயார் மைனாவதிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார்.

இதேபோல் மாணவர் இர்பான் சார்பில் வாதாடிய வக்கீல் அரசன், ‘‘மாணவர் இர்பான் மொரீசியஸ் நாட்டு மருத்துவக்கல்லூரியில் மாணவராக உள்ளார்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது எனக்கூறியதை நம்பி, இவர் மொரீசியஸ் நாட்டில் இருந்து வந்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார். இவர்களின் வாதங்களை கேட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம், ‘‘இவ்வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இவ்வழக்கில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்திற்கு உள்ளது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற சிலப்பதிகார கருத்தை மேற்கோள்காட்டி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

முகமதுசபி காவல் 25ம் தேதி வரை நீட்டிப்பு

மாணவர் இர்பானின் தந்தை முகமது சபியின் நீதிமன்ற காவல் நேற்று முடிந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார், முகமது சபியை நேற்று தேனி குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம், முகமதுசபியை வரும் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை சிபிசிஐடி போலீசார் தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories: