7 பிரிவை இணைத்து தேவேந்திரர் குல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை,..தமிழக அரசின் உயர்மட்ட குழு சென்னையில் ஆய்வு : ஆயிரக்கணக்கானோர் மனு

சென்னை: ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து, தேவேந்திரகுல வேளாளர்களாக அறிவிக்க கோரியது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு சென்னையில் நேற்று ஆய்வு நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள்  திரண்டு வந்து மனு அளித்தனர். இதனால் சேப்பாக்கத்தில் பரபரப்பு நிலவியது. பள்ளர், குறும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் ஆகிய ஏழு பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்கக்  கோரி பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து விசாரிக்க ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஏற்கனவே ஒருமுறை  விசாரணை நடத்தியது.

இந்நிலையில், நாங்குநேரியில் மெஜாரிட்டியாக உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்தனர். அதோடு, அவர்கள் தனியாக வசிக்கும் 63 கிராமங்கள், மற்ற சமூகத்தினருடன் வசிக்கும் 50  கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். பிரசாரத்துக்கு வந்த அரசியல் கட்சியினர், அமைச்சர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், தமிழக அரசு திடீரென்று ஹன்ஸ்ராஜ் வர்மா குழு மீண்டும் விசாரணை  நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்பின், குழுவின் இரண்டாம் கட்ட ஆய்வு நேற்று சென்னை எழிலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் துறை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான அமைப்பு மற்றும் தனிநபர்கள்  தங்களது கோரிக்கை தொடர்பாக மனுவை அளித்தனர்.

மேலும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன், தேவேந்திர குல மக்கள் இயக்கத் தலைவர் குமுளி ராஜ்குமார் மற்றும் மள்ளர் நாடு சார்பாக அண்ணாமலை உள்ளிட்ட  பல்வேறு அமைப்பின் தலைவர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் திரண்டு மனு அளித்தனர். இதன்பிறகு கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தொழில் வர்த்தக ரீதியாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் உயர வேண்டும்  என்றால் உடனடியாக எங்களை தேவேந்திர குல வேளாளர் என்று குறிப்பிட்டு அரசாணை வெளியிட வேண்டும்’’ என்றார்.

Related Stories: