வத்திராயிருப்பில் முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

வத்திராயிருப்பு: புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு, வத்திராயிருப்பில் முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவையொட்டி கடந்த 1ம் தேதி வடக்கு வாசல் செல்லாயி அம்மன் மதுப்பொங்கலும், 8ம் தேதி முத்தாலம்மன் மதுப்பொங்கலும் நடந்தது. தொடர்ந்து கடந்த 9ம் தேதி முத்தாலம்மன் 67ம் ஆண்டு பொங்கல் கலை விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

7ம் நாள் விழாவாக நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. மாலை 7 மணியளவில் முத்தாலம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. முன்னதாக இன்று அதிகாலை 1 மணியளவில் முத்தாலம்மன் ேதருக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 2 மணியளயில் தேரோட்டம் துவங்கியது. நகர் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.

தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், மூக்கன், எஸ்ஐக்கள் பால்வண்ணநாதன், செல்லபாண்டி, நாகராஜ் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: