லலிதா ஜுவல்லரி நகை கடை கொள்ளை: கொள்ளையன் முருகனை கர்நாடக மாநில போலீஸ் மேலும் 8 நாள் விசாரிக்க அனுமதி

பெங்களூரு: லலிதா ஜுவல்லரி நகை கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட முருகனை 8 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முருகன் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களுருவில் இருந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெங்களுருவில் உள்ள காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையின் போது அவனை திருச்சி அழைத்து சென்று காவிரி ஆற்றங்கரை அருகில் அவன் புதைத்து வைத்திருந்த சுமார் 12 கிலோ தங்கத்தை மீட்டனர்.

இதனிடையே வருடைய போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து அவனை உடனடியாக பெங்களுருவில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி மீண்டும் அவனை விசாரிப்பதற்காக 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதி முருகனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக 8 நாட்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் முருகனை சென்னை, திருச்சி, மதுரை உள்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று முன்னதாக முருகனால் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இரவே முருகனை சென்னைக்கு அழைத்துச் சென்று, அவன் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தய கார் ஒன்று சென்னையில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த காரை மீட்கும் நடவடிக்கையில் பெங்களூரு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: