நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 113 கிராமங்கள் இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறான முடிவு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

மதுரை: இடைத்தேர்தல் மட்டும் அல்ல எந்த தேர்தலிலும் வலிமையான ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையை பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் வலிமை வாய்ந்த வாக்குரிமையை இழக்க வேண்டாம் எனவும், இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறான முடிவு என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அக்.21-ம் தேதி நடைபெறவுள்ளது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா ஒரு சமதர்ம ஜனநாயக நாடு, அந்நாட்டில் வாழ்வோர் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க அனுமதி உள்ளது. அந்த வகையில் நாங்குநேரி தொகுதியில் உள்ள 113 கிராமங்களை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேந்த மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து, அதாவது வாக்குக்கேட்டு வரும் வேட்பாளர்களிடம் மனு அளிக்கின்றனர், ஆனால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அவை நிறைவேற்ற படாததால் தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

தங்களது வீடுகளில் கருப்பு கோடி ஏற்றியும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, காவல்துறை அனுமதியில்லாமல் மக்கள் கூடும் இடங்களில் பட்டியலினத்தில் இருந்து தங்களை நீக்கக் கோரி கருப்புக் கொடியேற்றப்பட்டதால் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அவரவர் வீடுகளில் கருப்புக் கொடியேற்ற உரிமை உண்டு, அவர்களை காவல்துறையினர் அச்சுறுத்தக் கூடாது என்று தெரிவித்தனர். மேலும், 113 கிராமங்களை சேர்ந்த 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலை புறக்கணிப்பது தவறான முடிவு என்று குறிப்பிட்ட நீதிபதிகள் வாக்காளர்கள் தங்களின் வலிமை வாய்ந்த வாக்குரிமையை இழக்க வேண்டாம் என அறிவுரை வழங்கினர். இந்த முடிவு தவறான விளைவை ஏற்படுத்தும் என்றும் அறிவுரை வழங்கினர்.

Related Stories: