காவல்துறையில் 16,108 பணியிடங்கள் காலியாக உள்ளன: தமிழக உள்துறை செயலாளர் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

சென்னை: காவல்துறையில் 16 ஆயிரத்து 108 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக உள்துறை செயலாளர் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பொதுமக்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் 8 மணி நேர வேலை என்பதை காவல் துறையில் அமல்படுத்தப்பட முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது. காவல்துறை சீர்திருத்தம் பற்றி அந்தெந்த மாநில அரசுகளுக்கு உரிய ஆணைகளை பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரத்து 758 இடங்களில் டிஜிபி பதவி முதல், இரண்டாம் நிலை காவலர் வரை 16 ஆயிரத்து 108 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை, வார விடுமுறை என ஆணையிடப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவதால் அவற்றை வழங்க முடியவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டில் தமிழக காவல்துறை சீர்திருத்த சட்டம் அமலில் உள்ளதாகவும், காவல்துறை தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் படைத்த 4வது காவல் ஆணையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் உள்துறை கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி கொள்ளாத நீதிபதிகள் ஒரு மாதத்தில் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டு விசாரணையை நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதில் காவல்துறையில் பெரிய அளவிலான சீர்திருத்தங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்கான நிதி மேலாண்மை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இவற்றில் தமிழக அரசு ஏற்று கொள்ளும் செலவுகள் மத்திய அரசிடம் கேட்க இருக்கும் நிதி போன்றவற்றையும் தெரிவிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Related Stories: