சேலம் - கரூர் பாசஞ்சர் ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்: காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

சேலம்: சேலத்திலிருந்து கரூருக்கு பாசஞ்சர் ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. சேலத்தில் இருந்து கரூருக்கு சிறப்பு ரயில் கடந்த 6 மாதங்களாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. எனவே இந்த ரயிலை ரெகுலர் ரயிலாக இயக்கினால் திருச்சிக்கு செல்ல வசதியாக இருக்கும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட, ரயில்வே அமைச்சகம் சேலம் - கரூர் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்ற முடிவெடுத்து அதன்படி இன்று முதல் ரயில் சேவை தொடங்குகிறது. இதை தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் கொடியசைத்து இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து கரூரில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும் ரயில், வாங்கல், மோகனுர், நாமக்கல், கலங்காணி, ராசிபுரம், மல்லூர் வழியாக சென்று சேலத்திற்கு பிற்பகல் 1.25 மணியளவில் வந்து சேருகிறது. பின்பு சேலத்திலிருந்து 1.40 மணியளவில் புறப்படும் இந்த ரயில் கரூருக்கு மதியம் 3.25 மணிக்கு சென்றடைகிறது. இதன் பிறகு இந்த ரயில் கரூரில் இருந்து திருச்சிக்கு செல்கிறது. சேலத்தில் இருந்து கரூர் செல்வதற்கு 25 ரூபாய் பயண கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வாரத்தில் அனைத்து நாட்களும் இந்த ரயிலானது இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் சேலம்-கரூர் பாசஞ்சர் போலவே, கோவை-பழனி-கோவை பாசஞ்சர்,  பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி பாசஞ்சர் ஆகியவையும் இன்று முதல் ரெகுலர் ரயிலாக இயக்கப்படுகிறது.

Related Stories: