ரயில்வே தனியார்மயம் கண்டித்து மிக விரைவில் வேலைநிறுத்த போராட்டம்: அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை: மக்களை பாதிக்கும் வகையில் கட்டணங்கள் உயர்த்துவதற்காக ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து மிக விரைவில் மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் அறிவித்துள்ளார்.அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிவகோபால மிஸ்ரா நேற்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:ரயில்வேயில் சில அபிவிருத்திக்கான ஆய்வுசெய்ய அமைத்த மத்திய குழுவின் பரிந்துரை பேரில், நாடு முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களையும் மற்றும் 150 ரயில்களையும் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒவ்வொரு நாளும் இரண்டரை கோடி மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையோர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். எங்கள் ஊழியர்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கடுமையான வெப்பநாளிலும் கடுங்குளிரிலும் வேலை செய்கின்றனர். அதோடு, ரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சாதாரண மக்கள் பயணம் செய்யும் வந்தே பாரத் ரயிலையும் தயாரிக்கிறோம். ஏழை மக்களுக்காகவே ரயில்வேத்துறை துவங்கப்பட்டது. ஆனால், தற்போது ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதால் 5 சதவிகித மக்களுக்குத்தான் பயனளிப்பதாக உள்ளது.

மத்திய அரசின் முடிவை ரயில்வே தொழிலாளர்களான நாங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். 1974ல் மிகப்பெரிய அளவில் ரயில்வே போராட்டம் நடந்தது. அதேபோல் ஒரு போராட்டத்தை மீண்டும் நாங்கள் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ரயில்வே அமைச்சரை சந்தித்து, இதுகுறித்து நாங்கள் முறையிட இருக்கிறோம். ஆனால், மத்திய அரசு இதில் பிடிவாதமாக இருக்குமானால், ரயில்வே துறையையும் மக்களின் நலனையும் பாதுகாக்க மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை. ரயில்கள் தனியார்மயம் ஆவதால் கட்டணம் பலமடங்கு உயர்ந்து, மக்கள் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, லக்னோ-டெல்லி இடையே செல்லும் சதாப்தி ரயிலில் 2ம் வகுப்பு கட்டணம் ₹680. ஆனால், அதே கட்டணம் தனியார் ரயிலில் ₹1,380. தீபாவளிக்கு முன் வரும் 25ம் தேதி அதே ரயிலில் பயணம் செய்ய ₹3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ரயிலை பயன்படுத்தும் அடிப்படை மக்களை பாதுகாக்கும் பொருட்டு, மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: