நிதி, ஆள்பற்றாக்குறை இருக்கும் நிலையில் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக அதிகாரிகள் ஓய்வு எடுக்கும் அறைகள்

சென்னை: நிதி, ஆள் பற்றாக்குறை இருக்கும் சூழலில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக அதிகாரிகள் ஓய்வு எடுக்க அறை அமைக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வருவாய்துறை, வணிக வரித்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் உள்ளன. இதில்,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் போதிய இட வசதி இல்லாததால்  அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு நிதி பிரச்னையும்  ஒரு காரணம். மேலும் பொதுப்பணித்துறையில் ஆள் பற்றாக்குறையும் தொடர்ந்து நிலவி வருகிறது.

இதுமட்டுமில்லாமல் பல்வேறு அரசு துறைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. அதை அரசு இடத்துக்கு மாற்ற இடம் இருந்தும் கட்டிடம் கட்ட நிதி இல்லை. இச்சூழலில் எழிலகத்தில் இடம் ஒதுக்கி தருமாறு தமிழக  பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், எழிலகம் வளாகத்தில் உள்ள கட்டிடங்களை பராமரித்து வரும் பொதுப்பணித்துறை மட்டுமே அந்த துறை ஊழியர்களுக்கு தாராள இட வசதி அளித்துள்ளது. அங்கு, ஒவ்வொரு  பிரிவுகளுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்களுக்கு மட்டும் அனைத்து அறைகளிலும் ஏசி வசதி செய்தும் தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த துறையில் பணிபுரிந்து வரும் தலைமை பொறியாளர்கள் வந்தால் அவர்கள் ஓய்வெடுப்பதற்கென்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் 600 சதுர அடி பரப்பளவில் ஏசி வசதியுடன் கூடிய  சொகுசு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான படுக்கை வசதி, டிவி, குளியல் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறை, ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறையில் தற்போது அந்த வளாகத்தில் பணியில் உள்ள தலைமை பொறியாளர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் தலைமை பொறியாளர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மற்ற  பொதுபணித்துறை ஊழியர்கள், நிதித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories: