சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உட்பட 7 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி

தர்மபுரி: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிறப்பு காய்ச்சல் வார்டுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து, சிகிச்சை  முறை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெங்கு உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சல் பரவுவதை தடுக்க, தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.  நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர, பள்ளி  மாணவர்கள், சுயஉதவிக்குழு பெண்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  

தமிழகத்தில், கடந்த ஜனவரி முதல் இதுவரை 3000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா எல்லையில் உள்ள மாவட்டமான தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், சென்னை  ஆகிய 7 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருந்தது. தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இன்றைய நிலவரத்தில், தமிழக மருத்துவமனைகளில் 100 முதல் 150 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். நடப்பாண்டு துரதிர்ஷ்டமாக 3 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர். டெங்கு பாதிப்பு உள்ளவர்கள், சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிற்கு திரும்பி செல்கின்றனர். இவ்வாறு குழந்தைசாமி கூறினார்.

Related Stories: