சாலையில் கழிவுநீர் வெளியேற்றியதை கண்டித்து அடுக்குமாடி குடியிருப்பை பொதுமக்கள் முற்றுகை

பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் மேம்பாலம் அருகே பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து  வெளியேறும்  கழிவுநீர், அங்குள்ள தொட்டியில் சேமிக்கப்பட்டு, பின்னர் கழிவுநீர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வந்தது.  ஆனால், சமீப காலமாக இந்த தொட்டியில் இருந்து கழிவுநீரை முறையாக அகற்றாததால், அடிக்கடி தொட்டியில் இருந்து  கழிவுநீர் வெளியேறி, ஜிஎஸ்டி சாலை வரை வழிந்து செல்லும். இந்த நிலையில் நேற்று காலையும் கழிவுநீர் தொட்டி நிறைந்து, அதிகளவு கழிவுநீர் ஜிஎஸ்டி சாலையில் வழிந்தோடியது. இந்த கழிவுநீர் அருகில் உள்ள கடை மற்றும் வீடுகளின் முன் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த   அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பு முன் திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்ததால், மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்பின் பிரதான நுழைவாயில் கேட்டை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த பல்லாவரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்திடம் பேசி, உடனடியாக கழிவுநீரை அகற்றவும், இனிமேல் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை  கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: