கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது டாஸ்மாக் அதிகாரிகள் அடையாள அட்டை அணிய வேண்டும் : மேலாண்மை இயக்குனர் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் அடையாள அட்டையை கடை ஊழியர்களிடம் காண்பிக்க வேண்டும் என மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சில்லறை விற்பனை கடைகளில் ‘மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்’ என்ற வாசகம் இருக்க வேண்டும். இதேபோல், பிளாஸ்டிக் தடை குறிப்பிடும் பலகை, உணவு பாதுகாப்பு சான்று, கடை உரிமச்சான்று, தீ அணைப்பான் கருவி, குப்பை தொட்டிகள் வைக்கப்பட வேண்டும். கிரில் கேட் அமைக்கப்பெற்றிருக்க வேண்டும். கடையின் ஷட்டருக்கு உட்புறமாக அரை அடி உயரத்தில் சுவர் அமைந்திருக்க வேண்டும். மின் மீட்டர் தனி மீட்டராக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கடையின் உட்புறம், வெளிப்புறம் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும், மதுக்கூடத்தில் மதுக்கூட உரிமம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறுமத்தொகை முறையாக செலுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மதுக்கூட நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் வகையில் மதுக்கூடம் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு செய்யும் குழுக்களிலுள்ள நபர்கள் தங்களின் அடையாள அட்டையை காண்பிப்பது இல்லை எனவும், மாவட்ட மேலாளர்கள் வேறு மாவட்டத்திலுள்ள சில்லறை விற்பனை கடைகளுக்கு தணிக்கைக்கு செல்லும் போது குறிப்பிட்ட ஒருசில கடைகளுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் செல்வதால் பல மன உளைச்சலுக்கு கடை பணியாளர்கள் ஆளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே, கடை ஆய்வு மற்றும் தணிக்கை அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும். கடை ஊழியர்கள் கேட்கும் பட்சத்தில் அதை காண்பிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதை கண்டறியும் போது எவ்வளவு தொகை மீட்கப்பட்டது என்பதை பதிவேட்டில் பதிய வேண்டும். சம்பந்தப்பட்ட கடை பணியாளரிடம் கையொப்பம் பெற வேண்டும். இதேபோல், முறைகேடுகளுக்கு உள்ளாகும் கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விற்பனை குறைவான கடைகள், அதிகம் விற்பனையாகும் கடைகள் மற்றும் மதுக்கூட வசதி இல்லாத கடை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: