பிரதமர் மோடியை வரவேற்பதில் பாஜவில் வெடித்தது கோஷ்டி பூசல்

* கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

* டெல்லி மேலிடத்தில் புகார் அளிக்க முடிவு

சென்னை :  தமிழக பாஜ தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார்.  கடந்த செப்டம்பர் 1ம் தேதி தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மாநில தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் விலகினார். இதனால் தமிழக பாஜ தலைவர் பதவி காலியானது. ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த பதவியில் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்கின் சந்திப்பு 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மோடி நேற்று காலை 11 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வந்தார். அங்கு அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பாஜ சார்பில் 4 இடங்களில் வரவேற்பு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் வந்திறங்கியதும் விமானம் நிலையம், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைந்துள்ள திருவிடந்தை. அதே போல திரும்பி செல்லும் போது ஹெலிகாப்டர் தளமான திருவிடந்தை, சென்னை விமானம் நிலையத்தில் வரவேற்பு கொடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள், கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ள தலைவர்கள் அதில் புறக்கணிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக கட்சியில் எந்தவித சம்பந்தமில்லாதவர்கள், கட்சியில் யார் என்றே அடையாளம் தெரியாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக புதிதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புறக்கணிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முக்கியமாக பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சக்ரவர்த்தி, முன்னாள் அமைச்சரும் பாஜ துணை தலைவருமான நயினார் நாகேந்திரன், பாஜ துணை தலைவர் பி.டி.அரசகுமார், தமிழக பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், எம்.என்.ராஜா உள்ளிட்ட கட்சிக்காக உழைத்த பலர் வரவேற்பு அளிப்பதில் இருந்து புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது.

அவர்கள் பெயர் வரவேற்பு நிகழ்ச்சிகளில் இடம் பெறவில்லை. தலைவராக தமிழிசை இருந்தவரை அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போது அது முற்றிலுமான மாற்றப்பட்டுள்ளது. இதனால், புறக்கணிக்கப்பட்டவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் பதவியை பிடிக்க பலர் போட்டியில் இருந்து வருகின்றனர். போட்டியில் இருந்தவர்கள் தான் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இது பாஜ தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால், பாஜவில் கட்சியினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

Related Stories: