ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தினை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்குகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன், பேட்ட என 2 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ், 3வது முறையாக ரஜினியுடன் இணைகிறது. இதனால் ரசிகர்கள் இடையே இந்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு, மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு ரஜினியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று காலை வெளியிடப்பட்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த அறிவிப்பை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ரஜினி காந்த்தை சன்டிவி செயல் இயக்குநர் காவியா கலாநிதி மாறன் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ரஜினியின் அடுத்த படம் பற்றி சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டதும் தலைவர் 168 என்ற ேஹஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. டிவிட்டர் முழுவதும் இந்த ஹேஷ்டேக் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பட அறிவிப்பை கேட்டதும் இயக்குநர்கள் வெற்றிமாறன், பாண்டி ராஜ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட  திரையுலகத்தை சேர்ந்த பலரும் படக் குழுவினருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Related Stories: