தலைவர்கள் வருகையால் மூடப்படாது வண்டலூர் பூங்கா வழக்கம் போல் இயங்கும்

சென்னை: மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையால், வண்டலூர் பூங்கா மூடப்படாது என்றும், இன்று வழக்கம்போல் இயங்கும் என்றும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகையான விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனைக்காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில், மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்று வருகின்றனர். இதனால், வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படுமா? அல்லது மூடப்படுமா? என்ற பெரும் குழப்பத்தில்  பார்வையாளர்கள் உள்ளனர்.

இதுகுறித்து பூங்கா நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் ஈசிஆர் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், பலத்த போலீசும் குவிக்கப்பட்டும் உள்ளதால், சுற்றுலா தலமான கோவளம், மாமல்லபுரம் மற்றும் சென்னை கடற்கரைக்கு பார்வையாளர்கள் செல்ல முடியாது. இதனால், வழக்கத்தை விட அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என்றும், எனவே பார்வையாளர்கள் குழப்பம் அடைய வேண்டாம்’ என்றும் கூறினர்.

Related Stories: