பேனர் விபத்தில் காற்றின் மீது வழக்கு போட வேண்டும் என பேசுவதா? சுபஸ்ரீ தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

சென்னை: பேனர் விபத்தில் காற்றின் மீது வழக்கு போட வேண்டும் என பேசுவதா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சுபஸ்ரீயின் தந்தை ரவி ரூ.1 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கின் விசாரணையை சென்னை மாநகர காவல் ஆணையர் கண்காணித்து வருகிறார். இவ்விகாரம் தொடர்பாக ஜெயகோபால் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையானது முழுமையாக முடிந்துள்ள நிலையில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த உயிரிழப்புக்கு பின்னர் பேனர் வைக்க எங்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Advertising
Advertising

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்ட ஜெயகோபால் மற்றும் அவரது உறவினரை கைது செய்வதற்கே 12 நாட்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையினர் தாமதம் காட்டி வருகின்றனர். எனவே, சிறப்பு புலனாய்வு பரிவு, இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், பேனர் விபத்தில் காற்றின் மீது தான் வழக்கு போட வேண்டும் என அதிமுகவினர் ஏன் பேசுகிறார்கள்? என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு தங்களது கண்டனங்களையும் நீதிபதிகள் பதிவு செய்தனர். மேலும் பேசிய நீதிபதிகள், சீன அதிபர் வருகையால் தான் சென்னை சுத்தமாகி உள்ளது. சீன அதிபரை போல உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகி விடும் என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதற்கான நகல் கிடைத்ததும், இவ்வழக்கின் மீதான விசாரணை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: