வேதியியல் துறைக்கான நோபல் பரிசு: லித்தியம் பேட்டரிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்வீடன்: 2019ம் ஆண்டின் வேதியல் துறைக்கான நோபல் பரிசு, லித்தியம் பேட்டரிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அக்டோபர் 7ம் தேதி மருத்துவத்துறை, 8ம் தேதி இயற்பியல் துறை, 9ம் தேதி வேதியியல், 10ம் தேதி இலக்கியம், 11ம் தேதி அமைதி மற்றும் 14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும் என முன்னரே தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

ஏற்கனவே, மருத்துவத்துறை மற்றும் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மொபைல் போன்கள் முதல் லேப்டாப்கள், இ-வாகனங்கள் வரையிலான எலெக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் லித்தியம் பேட்டரிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக வேதியியல் விஞ்ஞானிகள் ஜான் பி குட்எனாப்(ஜெர்மனி), ஸ்டான்லி விட்டிங்ஷஹாம்(பிரிட்டன்) மற்றும் அகிரா யோஷினோ(ஜப்பான்) ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டுகளின் முற்பகுதியில், ஸ்டான்லி விட்டிங்ஹாம், முதன்முறையாக லித்தியம் பேட்டரிகளை உருவாக்கினார்.

ஜான் குட்எனாப், அந்த லித்தியம் பேட்டரியின் செயற்திறனை இருமடங்காக உயர்த்தினார். இதன்மூலம் அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களில் இதன் பயன்பாடு இன்றியமையாததாக அமைந்தது. அகிரா யோஷினோ, லித்தியம் பேட்டரியில் உள்ள தூய லித்தியத்தை அகற்றி, லித்தியம் அயனிகளை பயன்படுத்தி அதன் பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்தார். இவர்களின் ஆராய்ச்சி, வயர்லெஸ் மற்றும் படிம எரிபொருள் பயன்பாட்டில் இல்லாத சமூகத்தை உருவாக்க பயன்படும் என்று நோபல் பரிசு கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில், இந்த லித்தியம் அயனி பேட்டரிகளே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேதியியல் நோபல் பரிசின் சிறப்பம்சங்கள்

* 2018ம் ஆண்டு வரை வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மொத்தம் 110 முறை வழங்கப்பட்டுள்ளது.

* 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்தப் பரிசு. போர் மற்றும் பிற காரணங்களால் 8 முறை வழங்கப்படவில்லை.

* வேதியியலுக்கான நோபல் பரிசை 63 முறை தனிநபர்களே பெற்றுள்ளனர்.

* 23 முறை இருவருக்கும், 24 முறை மூவருக்கும் இந்த பரிசு பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

* மொத்தம் 181 பேர் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

* ஃப்ரெட்ரிக் சேங்கர் என்ற ஒரே ஒரு விஞ்ஞானி மட்டும் இந்த பரிசை இரண்டு முறை பெற்றுள்ளார்.

* வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் சராசரி வயது 58 ஆகும்.

* 1935ம் ஆண்டு கதிரியக்க பொருட்கள் பற்றிய ஆய்வுக்காக 35 வயதான ஃப்ரெட்ரிக் ஜோலியட் என்பவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

* இவர் தான், குறைந்த வயதில் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர் ஆவார். இவருடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர், இவரது மனைவி ஐரீன் ஜோலியட். இவர், புகழ்பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரியின் மூத்த மகள் ஆவார்.

* வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் அதிக வயதானவர் ஜான் பி ஃபென். 2002ம் ஆண்டில் நோபல் பரிசை பெறும்போது ஃபென்னின் வயது 85 ஆக இருந்தது.

* வேதியியலுக்காக நோபல் பரிசை பெற்றவர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். அவர்களில் மேரி க்யூரியும், அவரது மகள் ஐரீனும் அடங்குவர்.

* ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் இருந்த காலத்தில், நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இருவர் பரிசைப் பெறுவதற்கு நாஸி அரசு தடை விதித்தது. அந்த இரண்டு பரிசுகளுமே வேதியியல் துறைக்காக வழங்கப்பட்டவை ஆகும்.

Related Stories: