தோல்வி உறுதி என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுகிறது : நாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நெல்லை: தோல்வி உறுதி என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுகிறது என நாங்குநேரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாங்குநேரி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  நேற்று பிரசாரத்தை தொடங்கினார். இன்றும் அவர் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிக்கிறார். இதற்காக நேற்று அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் தாழையூத்து விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம், மேலகுளம், பாளையஞ்செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூடியிருந்த 3 கிராம மக்களும் தங்கள் குறைகளை ஆதங்கத்துடன் தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி தான் நடந்து வருகிறது. தோல்வி பயத்தில் பல்வேறு காரணங்களை கூறி அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால் தான் கிராமங்களில் அடிப்படை வசதி முடங்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது. படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.

வேலைவாய்ப்பை பெருக்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவர்கள் சுற்றுலாவுக்காக தான் வெளிநாடுகளுக்கு சென்றனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றதும் இத்தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் பேசினார். திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் ஐ.பெரியசாமி, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: