மின் அலங்கார ஜெனரேட்டர் மீது கார் மோதல் கணவன், மனைவி பரிதாப சாவு

* மோடி-சீன அதிபர் வருகை ஏற்பாட்டால் விபரீதம்

* மாமல்லபுரம் அருகே பயங்கரம்

சென்னை: மோடி- சீன அதிபர் வருகையால் மின் அலங்காரத்திற்காக மாமல்லபுரம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.  இதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.  சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்மாறன் (21), கார் டிரைவர். இவரது மனைவி சுவேதா (20). இவர்களது உறவினர் இந்துமதி (26). இவரது மகன் பரத் (10 மாதம்) உள்பட 7 பேர் சென்னை புளியந்தோப்பில் இருந்து மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் மாலை காரில் புறப்பட்டனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் வேகமாக  மோதி, கார் அப்பளம் போல் நொறுங்கியது.  காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், தமிழ்மாறன், சுவேதா ஆகியோர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. ஒரே நேரத்தில் கணவன், மனைவி இறந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பரத் கவலைக்கிடமான நிலையில் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழ்மாறன்- சுவேதா தம்பதிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. விபத்துக்குள்ளான இவர்களது கார் மோதிய ஜெனரேட்டர், பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையையொட்டி மின் அலங்காரத்திற்காக நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: