திருக்கனூர் மாரியம்மன் கோயிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5 அடி உயர்த்தும் பணி தீவிரம்

திருக்கனூர் :    திருக்கனூர் மாரியம்மன் கோயிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5 அடி மேலே உயர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை  அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். புதுவை அடுத்த திருக்கனூரில் நூற்றாண்டுக்கு மேல் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக 9 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

 இதன் ஒரு பகுதியாக, ராஜகோபுரம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூலவர் அருள்பாலிக்கும் முத்து மாரியம்மன் கோயிலானது சாலை மட்டத்தில் இருந்து மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. மேலும், இக்கோயில் பழைய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. இதனால் கோயிலை இடிக்காமல் ஆகமவிதிப்படி பூமியிலிருந்து 5 அடி மேலே உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பீகார் மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளனது. மூலவர் கோயிலை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டு, பெரிய அளவிலான ஜாக்கிகள் மூலம் கோயிலை மேலே எழுப்பும் பணி ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

நேற்றுடன் 4 அடி உயரத்திற்கு கோயில் உயர்த்தப்பட்டுள்ளது. இன்றும் ஒரு அடி உயர்த்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கோயிலின் உயர்த்தும் பணியை அப்பகுதி மக்கள் ஆச்சரியமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Related Stories: