ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி சென்னையில் இருந்து 3.70 லட்சம் பேர் அரசு பஸ்சில் சொந்த ஊர் சென்றனர்

* வெறிச்சோடிய சாலைகள் * களைகட்டிய கோயம்பேடு

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையொட்டி 3.70 லட்சத்துக்கும் மேற்பட்டோர், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்களில் பயணித்துள்ளனர்.

சென்னையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மருத்துவம், வர்த்தகம், அரசு, தனியார் நிறுவன வேலைகள், படிப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளாமானோர் வசிக்கின்றனர். இவர்கள் ெபாங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஆயுதபூஜை தொடர் விடுமுறை மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களாக அமைந்துவிட்டது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து சென்னையில் தங்கியுள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று, விடுமுறையில் செல்வது வழக்கம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சொந்த ஊருக்கு சென்றனர். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கடந்த 10ம் தேதி  வழக்கமாக இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகள் 930 என மொத்தம் 3,155 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் வழக்கமாக இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சேரத்து 765 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,990 பஸ்கள் இயக்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கும் மொத்தமாக சேர்த்து வழக்கமாக இயக்கப்படும் 4,450 பஸ்களுடன் சேர்த்து 1,695 பஸ்கள் என மொததம் 6,145 பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் சுமார் 3.70 லட்சத்துக்கும் மேற்பட்டோர், சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். முன்னதாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் மாநகர் போக்குவரத்துக்கழக ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், கே.கே.நகர் பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: