ஆலந்தூர் 161வது வார்டில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு: நோய் பாதிப்பில் மக்கள்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, 161வது வார்டுக்கு உட்பட்ட ஆலந்தூர், வேளச்சேரி சாலையில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு, சரிவர துப்புரவு பணி நடைபெறாததால் எப்போதும் குப்பை கழிவுகள் மலைப்போல் தேங்கி கிடக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து பைக் மற்றும் காரில் வருபவர்களும், தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை இங்கு வீசி விட்டு செல்கின்றனர். இந்த குப்பை நாள் கணக்கில் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குறிப்பாக, கோயில் அருகிலும் குப்ைப குவியலாக காட்சியளிக்கிறது.  இதனால், கோயிலுக்கு வருவோர் துர்நாற்றத்தினால் முகம் சுளித்தபடி செல்லும் நிலை உள்ளது. இந்த கழிவுகளை தெரு நாய்கள் கிளறி, சாலை வரைகொண்டு செல்வதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும், குப்பை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாகி அதிகரித்து, இப்பகுதி மக்கள் தொற்று நோய் பாதிப்பில் தவித்து வருகின்றனர்.

தற்போது, அடிக்கடி மழை பெய்வதால் குப்பையுடன், மழைநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த குப்பையை அகற்றும்படி மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் அந்தப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆங்காங்கே மர்ம காய்ச்சல் பலரையும் பயமுறுத்தி வருவதால் அதிகாரிகள் இந்த குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: