ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை: பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதல்

சேலம்: ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம்  அலைமோதியது. ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை வரும் 7 மற்றும் 8ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்களில், ஆயுதபூஜை நாளில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். மேலும், புதிய கணக்கும் தொடங்குவார்கள். இந்த பண்டிகையையொட்டி, நேற்று (6ம்தேதி) முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. வரும் 9ம் தேதி தான், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. இதனால், நகர பகுதிகளில் வசிப்போர் தொடர் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து செல்லும் பஸ்கள், ரயில்களில் பயணிகள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகளவு காணப்பட்டது. நேற்று காலையும், ஏராளமானோர் பஸ், ரயில்களில் புறப்பட்டுச் சென்றனர். சேலத்தில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பெங்களூரு, சென்னை, மதுரை, திருச்சி, கோவை பகுதிகளுக்கு சென்ற பஸ்களில் அதிகபடியானோர் சென்றனர். இதேபோல், சேலம் ரயில்வே ஸ்டேஷனிலும் நேற்று, பயணிகள் கூட்டம் அலைமோதியது. கேரளா சென்ற ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் நிற்க கூட இடமின்றி பயணிகள் பயணித்தனர்.

இதேபோல், சென்னை, பெங்களூரு ரயில்களிலும் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. சென்னையில் இருந்து சேலம் வந்த ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் வந்திறங்கினர். மாலை மற்றும் இரவில் சென்ற ரயிலிலும் பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்தது. வரும் 8ம் தேதி அரசு விடுமுறை முடிவதால், அன்றைய தினம் மக்கள் திரும்பி வருவார்கள். அதனால், அப்போதும் பஸ், ரயில்களில் அதிகளவு கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: