தொடர் விடுமுறையை கொண்டாட ‘இளவரசியை’ சுற்றுலாப்பயணிகள் முற்றுகை

கொடைக்கானல்: ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ‘மலைகளின் இளவரசியான’ திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இரண்டாம் சீசனான ‘ஆப் சீசன்’ எனப்படும். இந்த சமயத்தில் வெயிலின் தாக்கமின்றி இதமான குளிர் இருக்கும். ஆப் சீசனை அனுபவிக்கும்விதமாகவும், ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையை கொண்டாடும்விதமாகவும் நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

குணா குகை, பைன் பாரஸ்ட், கிரீன் வேலி, தூண் பாறை, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. மேலும், ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் - டூவீலர் ரைடிங் செய்தும் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை, பியர் சோழா நீர்வீழ்ச்சிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கையழகை கண்டு ரசித்தனர்.

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் ஓட்டல்கள், விடுதிகள், டூரிஸ்ட் வாகன ஓட்டிகள், கைடுகள் என சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வட்டக்கானல் பகுதி சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். விடுமுறை நாட்களில் போக்குவரத்தை சீர்செய்ய கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: