மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளை வெளிப்படையாக தராத எந்த நாடும் பெரிய நாடாகாது: தமிழக ஆளுநர் பன்வாரிலால் பேச்சு

சென்னை: சென்னையில் நேற்று நடந்த விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது: விவேகானந்தரின் கோட்பாடுகளை பரப்புவதற்காக ஏக்நாத் ரானடே என்பவரால் உருவாக்கப்பட்டது விவேகானந்தா கேந்திரா. ஆன்மிகத்துடன் சேர்ந்து சேவை புரிவது தேசத்தை கட்டிக்காக்க மனிதன் செய்யும் பிரிக்கமுடியாத பணியாகும். இதுதான் விவேகானந்தரின் சிந்தனையாக இருந்தது. இந்த நோக்கத்துடன் விவேகானந்தா கேந்திரா நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 863 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தென் முனையில் 3 கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் விவேகானந்தா பாறை அமைக்கப்பட்டது விவேகானந்தா கேந்திராவின் சாதனையாகும்.காஷ்மீரில் இருக்கும் வைஷ்ணவ தேவிபோல் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலும் கலாச்சார ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள மக்களின் கலாச்சார ஒற்றுமை பண்டைய காலம் தொட்டே தொடர்ந்து வருகிறது.

விவேகானந்தரின் கற்பிக்கும்திறன் லட்சக்கணக்கான மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. அவர் சிகாகோவில் பேசும்போது அவரது பேச்சு அங்குள்ள இளைஞர்களை கவர்ந்தது. அதனால்தான் உலகின் அவர் உலக ஆன்மிக குருவாக முடிந்தது.இப்போது, உலகம் இந்தியாவை கவனித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், 125 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தை இந்தியாவை நோக்கி பார்க்க வைத்தவர் விவேகானந்தர். நமது பெருமையை காப்பாற்ற வேண்டும் என்று இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் விவேகானந்தர் போதித்தார். வாழ்வதுதான் பலம், நலிவடைந்தால் மரணம் என்று அவர் கூறினார்.   தேசத்தின் பலம் என்பது உண்மையும், நேர்மையும்தான். சுயநலமற்ற வழிபாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை தேசத்திற்காக வழங்க வேண்டும். மக்களிடம் தேசப்பற்று இல்லாமல் எந்த நாடும் வல்லமையுள்ள நாடாக முடியாது. சாதாரண மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகளை வெளிப்படையாக தராத எந்த நாடும் பெரிய நாடாக முடியாது. ஏழைகள், வறுமையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யாத நாடும் பெரிய நாடாக இருக்க முடியாது. இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற ஒவ்வொருவரும் தங்களின் சக்தியை வழங்க உறுதியேற்க வேண்டும்.

Related Stories: