அக்.10 முதல் டிசம்பர் 7ம் தேதி வரை நெல்லை, பொதிகை தாம்பரத்தில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:  விழுப்புரம்- சென்னை எழும்பூர் - கூடூர் இடையேயான வழித்தடத்தின் ஒரு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அக்டோபர் 10ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:திருநெல்வேலியிலிருந்து சென்னை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் அக்டோபர் 9ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை சென்னை எழும்பூருக்கு இயக்கப்படுவதற்கு பதிலாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், செங்கோட்டையிலிருந்து தினசரி இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் அக்டோபர் 9ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை சென்னை எழும்பூருக்கு இயக்கப்படுவதற்கு பதிலாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து தினசரி புறப்பட வேண்டிய நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் அக்டோபர் 10ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செல்லும். சென்னை எழும்பூர் - கயா வாராந்திர விரைவு ரயில் அக்டோபர் 13, 20, 27ம் தேதிகளிலும், நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1ம் தேதிகளில் எழும்பூரிலிருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். அதே ரயில் மறுமார்க்கத்தில் எழும்பூர் செல்வதற்கு பதிலாக சென்ட்ரல் வந்தடையும்.

விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயில் அக்டோபர் 10 முதல் டிசம்பர் 8ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். அதே நாட்களில் பயணிகள் வசதிக்காக செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்துக்கு காலை 9.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: