சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; பீதியில் பொதுமக்கள்: நிரம்பி வழியும் சிறப்பு வார்டுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு துறைகள் குழப்பம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், அரசு போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சல் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் ஆகியவை சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம் மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது.  திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர்  காய்ச்சல் காரணமாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக  பரிந்துரைத்து அனுப்பப்படுகின்றனர்.

இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில்  காய்ச்சல் வார்டுகள் வேகமாக நிரம்பி வருகிறது. வழக்கமாக, மழைகாலம் தொடங்கிய பின்னரே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மழைகாலம் தொடங்குவதற்கு முன்பே ஆங்காங்கே மழை பெய்து தண்ணீர்  தேங்கியுள்ளது. இது டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசு முட்டையிட்டு வளர காரணமாகி விடுகிறது. டெங்கு காய்ச்சலால் கடந்த மாத இறுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெப்ப சலனம், பிற காரணங்களால் பரவலாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் இது வழக்கமாக பதிவாகும் மழை பொழிவை விட அதிகம் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு தரப்பில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், எந்தெந்த துறைகள் இணைந்து டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலேயே குழப்பம் நிலவுகிறது.கிராமங்கள், பேரூராட்சிகள் வரை டெங்குவை கட்டுப்படுத்த வேண்டியது உள்ளாட்சித்துறையின் வேலை. மாநகரங்கள், நகராட்சி நிர்வாகத்துறையின்கீழ் வருகிறது. அங்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மாநகராட்சி நிர்வாகத்தின் வேலை.  அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகின்றன. அங்கு நல்ல தண்ணீர் தேங்காத வகையில் கண்காணிக்க வேண்டியது, பொதுப்பணித்துறையின் வேலை. முறையான கண்காணிப்பையும் மீறி டெங்கு காய்ச்சல்  பாதிப்புடன் வருபவர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் சிகிச்சை அளித்து குணமாக்க வேண்டும். ஆனால், சுகாதாரத்துறை சார்பில் டெங்கு உள்பட காய்ச்சல் காரணமாக காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை  அளிக்கப்படுகிறது.

முறையாக முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநகராட்சி தரப்பிலோ, சுகாதாரத்துறை  தரப்பிலோ டெங்கு காய்ச்சல்  இறப்புகளை உறுதிப்படுத்தவில்ைல. கடந்த சில  மாதங்களில் சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 390 பேருக்கு டெங்கு  காய்ச்சல் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல்  டெங்கு காய்ச்சல்  ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசு வளரும் வகையில் தேங்கிய மழைநீரை  அப்புறப்படுத்தாத நிறுவனங்களிடம் ₹32 லட்சம் அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவுதல் வேகமெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, சுகாதாரத்துறை அரசு துறைகளுடன் இணைந்து டெங்கு தடுப்பு, விழிப்புணர்வு  நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: