ராணுவ வீரர்களை உருவாக்கும் அமராவதி சைனிக் பள்ளியின் நிதிப்பற்றாக்குறை சிக்கல்களை தீர்க்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சைனிக் பள்ளியின் நிதிப்பற்றாக்குறை, மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடைக்கானல், பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் சைனிக் பள்ளிகளை (மாணவர் படைத்துறை பள்ளி)  ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் திறமையான ராணுவ வீரர்களை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக 1960ல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த  கிருஷ்ணமேனன் முடிவெடுத்தார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் 28 மாநிலங்களில் சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

 இந்த பள்ளிகளில் படித்தவர்கள் ராணுவத்திற்கு தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 1962ல்  சைனிக் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் இந்த பள்ளி திருப்பூர் மாவட்டம் அமராவதி நகருக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் படித்தவர்கள் 700  ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.  தற்போது இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நுழைவுத்தேர்வை ஒரு முறைதான் எழுத வேண்டும்.  தற்போது அமராவதி சைனிக் பள்ளியில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 67 சதவீத இடமும், வெளி மாநில மாணவர்களுக்கு 33 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிமாநில ஒதுக்கீட்டில் பெரும்பாலும் பீஹாரை சேர்ந்த மாணவர்கள்தான் உள்ளனர். இவர்களில் இரண்டாவது முறை நுழைவுத்தேர்வு எழுதி வந்தவர்கள் அதிகம் என்பதால் தமிழக மாணவர்களைவிட வயதில் மூத்தவர்களாக இருக்கிறார்கள்.  இதனால் விளையாட்டு போன்ற இதர செயல்பாடுகளில் முன்னிலையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சைனிக் பள்ளியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது அமராவதி நகரில் மட்டுமே நடைபெறுகிறது. சைனிக் பள்ளியில் மாணவர்களின் கட்டணம் கடந்த 1989ல் ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்பட்டது.

இந்த தொகை 2008ல் ரூ.55 ஆயிரமாக அதிகரித்தது. ஆனால், தற்போது ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.1 லட்சத்து 27 ஆயிரம்வரை  வசூலிக்கப்படுகிறது.பள்ளியில் சேருவதற்கான மருத்துவ பரிசோதனை கோவையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பெங்களூர் ராணுவ மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும். இல்லையென்றால்  சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் அகாடமிக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்கள் மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வசதிகளும், தங்கும் வசதிகளும் இல்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல  முறை மத்திய அரசுக்கு கோரி வைத்தும் நடவடிக்கை இல்லை. மேலும், இந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு உரிய சம்பள உயர்வு தரப்படவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டும் ரூ.2 கோடியே 30 லட்சம் சம்பள நிலுவை உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு திறமையான வீரர்களை அனுப்பும் சைனிக் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. ஆனால், அஜ்மீர், பெங்களூர், பெல்காம், சால் மற்றும் தோல்பூரில் உள்ள ராஷ்டிரிய ராணுவ  பள்ளிகளுக்கு மட்டும் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுகிறது.  சைனிக் பள்ளிகளுக்கான செலவினங்கள் குறித்து மத்திய அரசிடம் கேட்டால் மாநில அரசை அணுகுமாறு மத்திய அரசு தெரிவிக்கிறது. மாநில அரசிடம் கேட்டால் மத்திய ராணுவ அமைச்சகத்தை அணுகுமாறு மாநில அரசு தெரிவிக்கிறது.  இதனால், சைனிக் பள்ளிகள் நிதிச்சுமையில் தள்ளாடுகின்றன. மாணவர்களிடம் பெறும் கட்டணம் மற்றும் நன்கொடைகளால்தான் பள்ளி செயல்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் கொடகு நகரில் உள்ள சைனிக் பள்ளியில் படிக்கும் 9 மாணவர்களுக்கு ஆந்திர அரசு ரூ.8.97 லட்சம் கல்வி உதவித்தொகை தந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் சைனிக் பள்ளிக்கு மாநில அரசு எதுவும் செய்வதில்லை. பள்ளிக்க  கட்டிடம் 50 ஆண்டுகள் பழமையானவை. அவற்றை கூட பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்த கோரிக்கைகளுடன் மத்திய மனிதவள மேம்பாடு துறை, ராணுவ அமைச்சகம் மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு கடந்த ஆகஸ்ட் 26ல் கடிதம் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 எனவே, நுழைவுத் தேர்வை ஒரு முறை மட்டுமே எழுதும் பழைய நடைமுறையை பின்பற்றுமாறும், மீண்டும் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நுழைவுத் தேர்வை நடத்துமாறும், மாணவர் சேர்க்கையிம் மற்ற மாநில  ஒதுக்கீடு முறையை ரத்து செய்யுமாறும், தேசிய ராணுவ அகாடமியின் அதிகாரிகளைக்கொண்டு மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கற்றுத் தருமாறும், சைனிக் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்குமாறும் அதற்கான ஒப்பந்தத்தை  செய்யுமாறும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 6ம்  தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Related Stories: