ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முக்கிய அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ முடிவு: முன்னாள் அதிகாரிகள் 71 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதலாவதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார். இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 28 நாள் சிறைவாசம் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் கடந்த 2-ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 17ம்  தேதி வரை அதாவது மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட  நிலையில், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மீண்டும் கடந்த 3-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்ற  நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை வருகிற 15ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் ஆர் பானுமதி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்து  வழக்கை ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் 2007ம் ஆண்டு சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவரின் அமைச்சரவையின் கீழ் இருந்த முக்கிய அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. அதன்படி, நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரி  சிந்துஸ்ரீ குல்லர் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து கடந்த மாதம் சிபிஐ அனுமதி பெற்றது. இந்நிலையில் அந்த 4 அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கவலை தெரிவித்து மத்திய அரசின்  முன்னாள் அதிகாரிகள் 71 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ள நான்கு அதிகாரிகளும் அரசியல் ஆதாயத்திற்காக குறிவைக்கப்படுவதுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நேர்மையாக உழைக்கும் அதிகாரிகளை குறிவைத்து தண்டனை அளித்தால், பிற அதிகாரிகள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு அதிகாரிகள் பணியின் போது உள்ள அரசியல் கொள்கையை செயல்படுத்தியதாக கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதுடன், அவர்கள் பணிபுரிந்த போது அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

Related Stories: