காமராஜர் நகர் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 21ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பு வாசிகள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தங்களது நுழைவு வாயில் முன்பு நேற்று திடீரென பேனர் வைக்கப்பட்டது. அதில் கடந்த 10 வருடமாக வீட்டு பத்திரப்பதிவு, அடிப்படை வசதிகள் இல்லாததால், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நிலையில் தகவலறிந்த தேர்தல் அதிகாரிகள் அனுமதியின்றி பேனர் வைக்கக்கூடாது எனக்கூறி அதை உடனடியாக அகற்றினர். இதையடுத்து தேர்தல் துறையிடம் உரிய அனுமதி பெற்று பேனர் வைப்பதற்கான நடவடிக்கையில் குடியிருப்பு வாசிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, சுதந்திர பொன்விழா நகரில் மொத்தம் 168 குடியிருப்புகள் உள்ளது. இதில் குறைந்த, நடுத்தர, உயர்வகுப்பு குடியிருப்புகள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர பிரிவினருக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில் குறைந்த வருவாய் பிரிவினருக்கான 64 வீடுகளும், உயர் வகுப்பு பிரிவினருக்கான 94 குடியிருப்புகளுக்கும் மனைப்பட்டா இன்னமும் வழங்கப்படவில்லை. மேலும் நகரில் சாலை, பூங்கா, குடிநீர் வசதிகளும் முறையாக செய்து தரப்பட வில்லை. கடந்த 2009ம் ஆண்டு திடீரென வீடுகளுக்கான மதிப்பீடு குறைவாக இருப்பதாக கூறி குறைந்த வருவாய் பிரிவினர் கூடுதலாக வீட்டுக்கு ரூ.5 லட்சமும், உயர் வகுப்பினருக்கு ரூ.34 லட்சமும் கொடுக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்திருக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால் காமராஜர் நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர். இதனால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

Related Stories: