டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு நமஸ்கார் சேவை தொடக்கம்

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் டெல்லி விமான நிலையத்தில் நமஸ்கார் சேவைஎன்னும் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையில் டெல்லி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து விமானத்தில் ஏறி உட்காரும் வரையில் ஏர் இந்தியா ஊழியர்களால் சேவை அளிக்கப்படுகிறது. பாரம் நிரப்புதல், போர்டிங் பாஸ் அளிப்பது உள்ளிட்ட சேவைகளை அவர்கள் செய்து தருவார்கள் என்று தெரிவிக்கின்றனர்.

இதற்காக உள்நாட்டு பயணிகளுக்கு 750 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டு பயணிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமும் ஏர் இந்தியா நிறுவனம் நிர்ணயித்துள்ளது. எனினும், இந்த சேவையானது முதல்வகுப்பு பயணிகளுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது என்றும், பிஸினஸ் மற்றும் எக்கனாமிக் வகுப்பு பயணிகளுக்கு இல்லை என்றும் ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சோதனை முயற்சியாக, டெல்லி விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள நமஸ்கார் சேவைக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மும்பை விமான நிலையத்தில் விரைவில் தொடங்க நிர்வாகம் தயாராய் இருப்பதாகவும், இதையடுத்து கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: