உயர் நீதிமன்ற வளாகத்தில் கழிவுநீர் தேக்கம் சீரமைப்பு

தண்டையார்பேட்டை: பாரிமுனையில் சென்னை உயர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில், குடும்ப நல நீதிமன்றம், வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்கு, தலைமை நீதிபதி, மாவட்ட நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், வழக்கு சம்மந்தமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த வளாகத்தில் எஸ்பிளனேடு காவல் நிலையம், உயர்நீதிமன்ற காவல் நிலையம், கோட்டை காவல் நிலையம், பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையம், உயர்நீதிமன்ற உதவி ஆணையர் அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவை அமைந்துள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த உயர் நீதிமன்ற வளாகத்தில், தீயணைப்பு நிலையத்திற்கு பின்புறம் உள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் வெளியேறி குளம்போல் தேங்கியது. பல மாதங்களாக தேங்கும் கழிவுநீரால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வந்தது. இதுகுறித்து இங்குள்ள அதிகாரிகள், காவலர்கள் பலமுறை சம்மந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது, மழைக்காலம் என்பதால் கடந்த பல நாட்களாக தொடர்ச்சியாக பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி, குளம்போல் தேங்கி வருகிறது.

எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வௌியிடப்பட்டது. இதனையடுத்து, நேற்று காலை குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்து கெட்ராடர் லாரி மூலம் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி சுமார் 5 மணி நேரம் நடந்தது. பின்னர் உயர்நீதிமன்ற வளாகம் தூய்மையுடன் காணப்பட்டது.

Related Stories: