வைகை ஆற்றில் எரிவாயு குழாய் எதிர்த்து விவசாயிகள் போராட்டம் : திருப்புவனத்தில் நடந்தது

திருப்புவனம்:  திருப்புவனம் வைகை ஆற்றில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் செல்லப்பனேந்தல் அருகில், எரிவாயு குழாய் பதிக்க மண் பரிசோதனை நடப்பதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க  பொதுச்செயலாளர் ஆதிமூலம், வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி கணநாதன் உள்ளிட்டோர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர். விவசாயிகளிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஆற்றுக்குள் எரிவாயு குழாய் அமைக்க மண் பரிசோதனை  நடத்தக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். மேலும் திருப்புவனம் விஏஓ  வீமன், ஆர்ஐ பாஸ்கரன் ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

அதற்கு தாசில்தார் ராஜா, ‘‘இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் புதுச்சேரியிலிருந்து தூத்துக்குடிக்கு இயற்கை திரவ எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது.  ஆற்றில் 25 அடிக்கு கீழ் குழாய் பதிப்பதற்கு மண்  பரிசோதனை செய்வதாக கூறுகின்றனர். எந்தவித அனுமதியும் இன்றி இங்கு பணிகள் செய்யக்கூடாது  எனக் கூறி நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஐஓசி நிறுவன மேலாளர் சீனிவாசனிடம்  கேட்டபோது, ‘‘தமிழகம் முழுவதும் குழாய்கள் மூலம் இயற்கை திரவ எரிவாயு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.  திருப்புவனம் பகுதியில்  வைகை ஆற்றில் குழாய் பதிக்க மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்’’ என்றார். 

Related Stories: