மக்கள் மனங்களில் பிரிவினைகளை ஏற்படுத்த வேண்டாம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: மக்களை பிரித்தாள முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி பலிக்காது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமித் ஷா பங்கேற்று பேசினார்.  அப்போது, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் இந்துக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தால் அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார். அண்டை நாடுகளில் இருந்து  இந்தியாவுக்குள் குடியேறிய அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க, மாநிலங்களவையில் கடந்த 2016-ம் ஆண்டில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் அமித் ஷா நினைவுகூர்ந்தார்.

லட்சக்கணக்கான இந்து அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பது போன்ற தவறான தகவல்கள் பரவி வருவதை சுட்டிக் காட்டிய அமித் ஷா, தேசிய மக்கள் பதிவேடு தொடர்பான பொய்யான தகவல்களைப் பரப்பி மக்கள்  மனங்களில் அச்சத்தை ஏற்படுத்த மம்தா பானர்ஜி போன்றவர்கள் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். நாட்டின் பாதுகாப்புக்கு தேசிய மக்கள் பதிவேடு மிகவும் அவசியம் என்றும் அமித்ஷா கூறினார். தொடர்ந்து, கொல்கத்தாவின் நவராத்திரி  கொண்டாட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, துர்கா பூஜைக்கான பந்தலை திறந்து வைத்தார்.

இந்நிலையில், மதவேறுபாடுகளைக் களைந்து மேற்கு வங்க மக்கள் ஒற்றுமையுணர்வுடனும் சமய நல்லிணக்கத்துடனும் துர்கா பூஜையை கொண்டாடி வருவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். எங்கள் மாநிலத்திற்கு யார் வேண்டுமானாலும்  வரலாம். எங்கள் விருந்தோம்பலையும் பெறலாம். ஆனால் மக்களை பிரித்தாளும் அரசியலுடன் வந்தால் அது பலிக்காது என்று அமித் ஷாவை மறைமுகமாக சாடிய மம்தா, மக்கள் மனங்களில் பிரிவினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று  வலியுறுத்தினார்.

Related Stories: