திருவில்லி ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவ கொடியேற்றம்

திருவில்லிபுத்தூர்: புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் இன்று கொடியேற்றப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரமோற்சவ விழா நடைபெறும். இந்தாண்டு பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொட்டும் மழையில் மாட வீதிகள், ரத வீதிகள் வழியாக  கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

கொடியை ஆண்டாள் கோயில் அர்ச்சகர் வாசுதேவன் ஏற்றினார். கொடியேற்றத்தை முன்னிட்டு பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோருடன் பெரிய பெருமாள் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா வரும் அக். 13 வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக பெரிய பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தினமும் நடக்கும் வீதிஉலா நிகழ்ச்சியில், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியருடன் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: