சிக்கிம் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் சலுகை !! : தகுதியிழப்பு காலத்தை 1 ஆண்டு 1 மாதமாக குறைத்தது தேர்தல் ஆணையம்

கேங்டாக் : ஊழல் வழக்கில் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட சிக்கிம் முதல்வரின் தகுதியிழப்பு காலத்தை தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங், கடந்த 1990ல் அமைச்சராக இருந்த போது, ஊழல் செய்ததாக 2003ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட அவருக்கு 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தொடங்கிய தகுதியிழப்பு காலம், 2024ல் முடிவடைய இருந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேம் சிங் தமங் தலைமையிலான கிராந்திகரி மோர்ச்சா வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து, முதல்வர் பொறுப்புக்கு வந்த பிரேம் சிங் தமங் 6 மாதங்களில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அவர், தமது தகுதியிழப்பு காலத்தை குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரேம் சிங் தமங் தகுதியிழப்பு காலத்தை 1 ஆண்டு ஒரு மாதமாக தேர்தல் ஆணையம் குறைத்தது. இதனால் தேர்தலில் போட்டியிட்டு பதவியை தக்கவைத்து கொள்ள முதல்வர் பிரேம் சிங் தமங்கிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: