காலிபணியிடங்களால் தத்தளிக்கும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் தற்காலிக, நிரந்தர பணியிடங்கள் எத்தனை?

* முதன்மை தலைமைபொறியாளர் கடிதம்

* பிஇ மாணவர்களுக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர்கள் காலி பணியிடங்கள் தொடர்பான அறிக்கை அளிக்க முதன்மை தலைமை பொறியாளர் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், பராமரித்தல், ஏரி, அணைகளின் புனரமைத்தல், புதிய நீர்த்தேக்கம், அணைக்கட்டுகள் கட்டுதல்  உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதன் மூலம் திட்டப்பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை  கண்காணிக்க மண்டல தலைமை பொறியாளர்கள் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  பணிகளை செய்கின்றனர்.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு, ஒய்வு உள்ளிட்ட காரணங்களால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உதவி பொறியாளர்கள் 650 பேரும், உதவி  செயற்பொறியாளர்கள் 279 பேரும், செயற்பொறியாளர்கள் 77 பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.இதையடுத்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உதவி பொறியாளர், இளநிலை  பொறியாளர் (கட்டுமானம்), உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) நிரந்தர மற்றும் தற்காலிக பணியிடங்கள் தொடர்பாக அறிக்கை கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கேட்கப்பட்டது. ஆனால், யாரும் அறிக்கை  சமர்ப்பிக்கவில்லை. இனி வருங்காலங்களில் ஒவ்வொரு மாதமும் உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் தொடர்பான விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், பணியிடங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்வதாக இருந்தால், உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.இந்த காலிபணியிடங்களின் அடிப்படையில் பிஇ, டிப்ளமோ, படித்து முடித்த சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களை உதவி ெபாறியாளர், இளநிலை பொறியாளர் தற்காலி பணியிடங்களில் நியமிக்கப்படும். காரணம் அதிக  காலியிடம் காரணமாக பொதுப்பணித்துறையில் அடிப்படை பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பிஇ, டிப்ளமோ, படித்து முடித்த சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களை உதவி ெபாறியாளர், இளநிலை பொறியாளர் தற்காலிக பணியிடங்களில் நியமிக்கப்படும்

Related Stories: