உள்துறை கட்டுப்பாட்டில் அசாம் ரைபிள்சை மாற்றினால் மோசமான விளைவு ஏற்படும்: மத்திய அரசுக்கு ராணுவம் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘சீனாவை ஒட்டிய சிக்கல் நிறைந்த இந்திய எல்லையை பாதுகாத்து வரும் அசாம் ரைபிள்ஸ் படையை மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால், மோசமான விளைவுகள் ஏற்படும்,’ என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா-சீனா எல்லை மற்றும் மியான்மரை ஒட்டிய 1,640 கிமீ நீளமுள்ள எல்லையை பாதுகாக்கும் பணியில் அசாம் ரைபிள்ஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 1884ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படைப்பிரிவு, 1965ம் ஆண்டு ராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இப்படையின் 70-80 சதவீதம் வீரர்கள், சிக்கல் நிறைந்த சீனாவை ஒட்டிய எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அப்பகுதியில் சீனாவின் செயல்பாடுகள், அத்துமீறல்கள் குறித்து ராணுவத்திற்கு உடனடியாக தகவல்களை தெரிவித்து வருவதும் அசாம் ரைபிள் படைதான். சுதந்திரந்திற்கு பிறகான அனைத்து போர்களிலும் இப்படைப் பிரிவு பங்கேற்றுள்ளது. இதுதவிர, வடகிழக்கு பிராந்திய எல்லையில் ஊடுருவல்களை தடுப்பதிலும் இப்பிரிவு முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிலையில், அசாம் ரைபிள்ஸ் படையை இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையுடன் இணைத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்படை பிரிவின் நிர்வாக பொறுப்பை மட்டும் உள்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. இதை உள்துறையுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ள பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் விரைவில் விவாதிக்கப்படவும் உள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு ராணுவம் அதிருப்தி தெரிவித்துள்ளது.  ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உள்துறை அமைச்சகத்தின் இந்த பரிந்துரை, சீன எல்லை கண்காணிப்பில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, இவ்விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் நேரடியாக தலையிட வேண்டுமென ராணுவம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் நிலைபாடு குறித்தும் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு சூழல் பதற்றமான நிலையில் இருக்கும்போது இத்தகைய மாற்றம் செய்ய முயற்சிப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது,’’ என்றார்.

Related Stories: