நாகர்கோவில்-திருச்செந்தூர் வழித்தடத்தில் புதிய பஸ்கள் இயக்கம்: பயணிகள் வரவேற்பு

சாத்தான்குளம்: நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் வழித்தடத்தில் பழைய பஸ்கள் 9 புதிய ரக பஸ்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. இதனை பயணியர்கள் வரவேற்றுள்ளனர். நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பணிமனையில் இருந்து சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பல காலமாக பழைய பஸ்களே இயக்கப்பட்டு வந்தன. சென்னையில் தமிழக முதல்வர், பல புதிய பஸ்கள் இயக்கி தொடங்கி வைத்தாலும், சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு பழைய மாடல் பஸ்களே தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிய பஸ்கள் இயக்கப்படும் என பயணியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது 9 பழைய பஸ்கள் புதிய பஸ்களாக மாற்றப்பட்டு நேற்று முன்தினம் முதல் இயக்கப்படுகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் ஜோசப் அலெக்ஸ் கூறுகையில், திருச்செந்தூருக்கு சாத்தான்குளம் வழியாக செல்லும் அரசு பஸ்கள் 9 புதியரக பஸ்களாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. ஆனால் சாத்தான்குளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த போக்குவரத்து கழக பணிமனை என்பதற்காக கூடுதல் பஸ்கள் ஒதுக்கப்படாமல் கடந்த 2 ஆண்டுகளாக 4 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக பஸ்கள் ஒதுக்கப்பட்டு பல பகுதிகளுக்கு இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளின் வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளது. முதலில் சாத்தான்குளம் பணிமனைக்கு திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கிடும் வகையில் 10 பஸ்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும். மேலும் மதுரை, கோவை, பழனி, திருப்பூர், ராமேஸ்வரம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு தொலைதூர பகுதிகளுக்கு பஸ்கள் சாத்தான்குளத்தில் இருந்து இயக்கிட வேண்டும் என்றார்.

Related Stories: