மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர் சந்தனம், தேன் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 11.30மணிக்கு மேளம் தாளம் முழங்க உற்சவர் அங்காளம்மமனை கோயில் மண்டபத்திலிருந்து வடக்குவாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு சென்று ஊஞ்சலில் வைத்தனர். இதனை தொடர்ந்து கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடலை பாடினர். இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இரவு 12.30மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனை மீண்டும் கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களி லிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: