கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தது: அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர்

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர்   தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. தமிழக அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25ம் தேதி காலை  வினாடிக்கு 500 கனஅடி  வீதம் தண்ணீரை திறந்து விட்டது. மறுநாள் மாலை 2000 கனஅடியாகவும் திறக்கப்பட்டது.  இந்த தண்ணீர் கண்டலேறுவில் இருந்து 152 கி.மீ. கடந்து நேற்று காலை 10.30 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.

தமிழக எல்லையில் நேற்று பகல் 11.20 மணிக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின், எம்எல்ஏ பலராமன், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் ஆந்திர, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி  வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னையில் 190 நாட்கள் மழை பொழிவில்லை. அதனால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது.தற்போது அந்த பிரச்னை சீர் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து சென்னை மக்களின் குடிநீர்  தேவைக்காக கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: