விமான நிலையத்தில் பரபரப்பு எடப்பாடியை வழியனுப்ப துப்பாக்கியுடன் வந்த நிர்வாகி : போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வழியனுப்ப துப்பாக்கியுடன் வந்த அதிமுக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிற்பகல் 2.30 மணி விமானத்தில் சென்னையிலிருந்து கோவை புறப்பட்டுச் சென்றார். அவர், வழக்கமாக சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 5 வழியாக காரில் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வார். அவர் போகும்போதும் வரும்போதும் அவரை வழியனுப்ப வரவேற்க ஏராளமான அதிமுகவினர் கேட் நம்பர் 5 அருகே கூடியிருப்பது வழக்கம். அதேபோல், நேற்றும் அதிமுகவினர் பலர் அங்கு கூடியிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக விமான நிலைய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் வழியனுப்ப வந்தவர்கள் வைத்திருந்த கைப்பை மற்றும் பைகளை சோதனை நடத்தினர். அப்போது காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் (45) என்பவரையும் சோதனை நடத்தினர்.

அப்போது, அவர் கட்டியிருந்த வேஷ்டியின்  இடுப்பில் ஏதோ ஒரு பகுதியில் மர்ம பொருள் இருப்பது சற்று வித்தியாசமாக தெரிந்தது. எனவே போலீசார் அவரை தடவி பார்த்தனர். ‘நான் ஒன்றிய செயலாளர், என்னையே தடவிப் பார்க்கிறீர்களா’ என்று கேட்டார். அதற்கு போலீசார் வேட்டியின் இடுப்பு பகுதியில் என்ன வைத்திருக்கிறீர்கள். அதை வெளியில் எடுங்கள்’ என்றனர். அதை அவர் வெளியில் எடுத்தபோது தோல் உறையுடன் கூடிய கைத்துப்பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு நின்றிருந்த மற்ற அதிமுகவினரும் இதனால் அதிர்ச்சியில் உரைந்தனர். அவரை சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், தனக்கு தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல முன் விரோதங்கள் உள்ளன. எனவே என்னுடைய சொந்த பாதுகாப்புக்காக முறையாக அரசிடம் விண்ணப்பித்து உரிமம் பெற்று  இந்த கைத்துப்பாக்கியை வாங்கி கடந்த ஓர் ஆண்டாக வைத்திருக்கிறேன். நான் எங்கு சென்றாலும் என்னுடைய பாதுகாப்புக்காக அதை எடுத்துச் செல்வேன். இடுப்பிலேயே துப்பாக்கியை எப்பொழுதும் சொருகி வைத்திருப்பேன்.

ஏற்கனவே முதலமைச்சரை வழியனுப்ப வரவேற்க பலமுறை விமான நிலையம் வந்துள்ளேன். அப்போதும் இந்த துப்பாக்கியுடன் தான் வந்தேன். ஆனால் பெரும்பாலான நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து காரை விட்டு இறங்கும்போது இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை காரில் பாதுகாப்பாக வைத்துவிட்டு வருவேன். ஆனால், இன்று அவ்வாறு வைக்க மறந்து விட்டேன். பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் துப்பாக்கிக்கான லைசென்ஸை கேட்டனர், ஆனால் அவர் லைசென்ஸை எடுத்து வரவில்லை. வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்றார். எனவே, விமான நிலைய போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். உடனே வீட்டிற்கு தகவல் கொடுத்து ஆவணங்களை கொண்டு வரச் சொல்லுங்கள் என்றனர். அதுவரை அதிகாரிகள் அவரை வெளியில் விடவில்லை.

இதையடுத்து ஜீவானந்தம், அவருடைய வீட்டினருக்கு தகவல் கொடுத்து துப்பாக்கி ஆவணங்களை கொண்டு வரச் செய்தார். ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர். அவை உண்மையான ஆவணம் என தெரியவந்தது. ஆனாலும் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஒரு முதலமைச்சர் வரும் இடத்தில் கைத்துப்பாக்கியுடன் வந்து நிற்பதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. அவரது இடுப்பில் சொருகப்பட்டிருந்த துப்பாக்கி கூட்ட நெரிசலில் தவறுதலாக பட்டன் அழுத்தப்பட்டால் பெரும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்திருக்கும். எனவே அதிகாரிகள் ஜீவானந்தத்தை மிகவும் கடுமையாக எச்சரித்து அவரிடம் முறைப்படி எழுதி வாங்கிவிட்டு அனுப்பினர்.

Related Stories: