ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது; ஆய்வு செய்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கீழடி: திமுக தலைவரும், தமிழக எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு செய்தார். அவருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குவதாக தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3ம் கட்டமாக அகழாய்வு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4ம் கட்ட அகழாய்வை மேர்கொண்டது.

இதைத்தொடர்ந்து 5ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 4 கட்ட அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 5ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன்றவை கண்டறியப்பட்டன. இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இதுவரை 13,638 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

இவற்றை ஆய்வு செய்ததில் 2,600 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கீழடியில் கிடைத்த பழமையான தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு செய்தார். அவருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குவதாக தெரிவித்தார்.

ஆய்வு பணியில் ஈடுபடும் தொல்லியல் துறைக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவித்தார். மத்திய அரசும், மாநில அரசும் முழு கவனத்துடன் ஆகழாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின், கி.மு.6.ம் நூற்றாண்டில் தமிழர் நாகரீகம் எப்படி இருந்தது என்பது கீழடி ஆய்வில் தெரிய வருகிறது என்று தெரிவித்தார். கீழடி தொல்லியல் ஆய்வுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கீழடியை போன்று தூத்துக்குடி அருகேயுள்ள ஆதிச்சநல்லூரிர் தொல்லியல் ஆய்வும் தொடர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

Related Stories: