ஆரணி பகுதிகளில் குடிமராமத்து பணிகளில் தொடரும் முறைகேடுகள் அதிகாரிகள் உதவியுடன் வண்டல் மண், மணல் திருட்டு

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆரணி: ஆரணி பகுதிகளில் குடிமராமத்து பணிகளில் தொடரும் முறைகேடுகளால் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உதவியோடு வண்டல் மண், மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம், காமக்கூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில்  உள்ள கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அணைக்கட்டினை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ₹2.64 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர், கலெக்டரால் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் அணைக்கட்டு அமைந்துள்ள பகுதிகளில் தூர்வாரி ஆழப்படுத்தி சுற்றியுள்ள கரைகள் மேல் மண் கொட்டி கரையை பலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. அதேபோல், குடிமராமத்து திட்டத்தின் மூலம்  விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் சாகுபடி குறையும் நிலங்களுக்கு  வண்டல்மண் தேவை என்றால்  சம்பந்தப்பட்ட விவசாயிகள் கலெக்டர், கனிமவள அதிகாரிகள், தாசில்தாரிடம் மனு கொடுத்து பொதுப்பணிதுறையின் மூலமாக விளைநிலங்களில் மண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் ஆரணி அடுத்த எஸ்விநகர் கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு தூர்வாரி புனரமைப்பு பணிகள் மூலம் கரைகள் பலப்படுத்தும் பணிகளுக்காக வண்டல் மண் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

குடிமராமத்து பணிகளுக்காக பயன்படுத்த வேண்டிய வண்டல் மண் கரையை பலப்படுத்தாமலும், விவசாயிகளுக்கு வழங்காமலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உதவியோடு  சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செங்கல் சூலை உரிமையாளர்களுக்கு  விற்கப்பட்டு வருகிறது. வண்டல் மண் திருட்டு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் கமண்டல நாகநதி ஆற்றில் இரவு பகலாக வண்டல் மண், மணல் திருட்டு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: குடிமராமத்து பணிகள் என்ற பெயரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உதவியோடு ஏரிகளில் உள்ள களி மண், வண்டல் மண் போன்றவைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்காமல் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் டிராக்டர் லோடு ஒன்றுக்கு ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், மணல் மாபியாக்கள் கமண்டல நாகநதி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குளங்கள், ஏரிகளில் தூர்வாரப்படும் மண் கரையை பலப்படுத்தாமல் டிராக்டர் லோடு ₹700 முதல் ₹1000 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறைக்கும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் குடிமராமத்து பணிகள் என்ற பெயரில் தினமும், இரவு பகலாக மணல், மண் திருட்டு அதிகரித்து வருகிறது. மேலும், அணைக்கட்டு புனரமைக்கும் பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளவதில்லை. தடுப்பணைகளும் தரமற்றதாகவும் கட்டப்பட்டு வருகிறது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூர்வாரும் பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனு அளிக்காத நிலையில்  மண் எடுப்பு ஜரூர்

குடிமராமத்து திட்டத்தில் வண்டல் மண் கேட்டு  விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கடந்த மாதமே மண் எடுக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளும் தேவையான வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு யாரும் இதுவரை வண்டல் மண், களி மண் கேட்டு மனு அளிக்கவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகளும், தாசில்தாரும் தெரிவித்தனர்.

ஆனால்  ஆரணி சுற்று வட்டார பகுதிகளிலும், குறிப்பாக எஸ்வி நகரம் பகுதியில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் வண்டல் மண் இரவு பகலாகவும்,  ஏரிகள், குளங்களில் இருந்து டிராடக்டர்கள் மூலம் செங்கல் சூலைகளுக்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: