நீதிமன்ற உத்தரவுபடி திருச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு லாரியில் ஏற அடம்பிடிக்கும் 3 யானைகள்

* மரக்காணம் அருகே பரபரப்பு

மரக்காணம் : காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் சந்தியா(45), இந்து(35), ஜெயந்தி(31) என்ற 3 யானைகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் வளர்த்து வந்துள்ளனர். இவைகள் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய பூஜைகளின்போது சுவாமியுடன் வீதியுலாவருதல் போன்ற பணிகளை செய்துவந்துள்ளது. இந்த யானைகளை குணசீலன் என்ற யானை பாகன் பராமரித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் யானைபாகன் குணசீலன் இறந்துவிட்டார். இதனால் இவைகளை முறையாக பராமரிக்க ஆட்கள் இல்லாததால் யானைகள் நலிவடைந்துள்ளது.

இதனால் இந்த யானைகளை முறையாக வளர்க்கவும், அவைகளுக்கு முழு ஓய்வு அளிக்கவும் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்  ட்ரீ பவுண்டேஷன்  விலங்குகள் பாதுகாப்பு  என்ற தொண்டு  நிறுவனத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் யானைகளை பாதுகாக்க விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குரும்புரம் என்ற இடத்தில் அமைந்துள்ள இயற்கை மூலிகை வனம் ஒட்டிய பகுதியில் சுமார் 13 ஏக்கர் நிலத்தை ட்ரீ தொண்டு நிறுவனம் சார்பில் வாங்கி அந்த இடத்தில் பல்வேறு வகையான மரங்கள், செடிகளை இயற்கை காடுகள் போல் வளர்த்துள்ளனர்.

இந்த இடத்தில் யானைகளுக்கு 3 பெரிய செட்கள் அமைத்துள்ளனர். இது போல் யானைகள் குடிக்க குடிநீர் தொட்டிகள், யானைகள் குளிக்க குளம் போன்ற வற்றையும் அமைத்துள்ளனர். மேலும் இந்த இடத்திற்கு ஒரு மேலாளர், ஒரு மேற்பார்வையாளர், 3 யானை பாகன்கள், 3 உதவி யானை பாகன்கள் கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினரை அமைத்து 3 யானைகளையும் இயற்கையான சூழலில் பாதுகாப்புடன் வளர்த்து வருகின்றனர். இங்கு வளர்க்கப்படும் யானைகளுக்கு காலை, மாலை நேரங்களில் முறையாக நடை பயிற்சியும் அளிக்கின்றனர். இது போல் காடுகளில் வளரும் யானைகள் எப்படி உணவு சாப்பிடுகிறதோ அதுபோல் இங்கும் யானைகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த யானைகளை வனத்துறையின் முறையான அனுமதியில்லாமல் தனியார் தொண்டு நிறுவனத்தினர் வளர்க்கின்றனர் என்றும், யானைகளின் பாதுகாப்பு கருதி மரக்காணம் அருகே குரும்புரம் பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் காஞ்சிபுரம் கோயில் யானைகளை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த வனவிலங்குகள் ஆர்வலர் முரளிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை கடந்த 19 ந் தேதி விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம் குரும்புரம் பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் காஞ்சிபுரம் கோயிலுக்கு சொந்தமான 3 யானைகளையும் திருச்சியில் இருக்கும் யானைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக்டோமர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கால்நடை மருத்துவக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் கொண்ட குழுவினர் இங்குள்ள யானைகளை திருச்சியில் இருக்கும் யானைகள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச்செல்ல 3 லாரிகளுடன் வந்தனர். இவர்கள் யானை வளர்க்கப்படும் இடத்திற்கு வந்தபோது அங்கிருந்த யானைகளை பாதுகாத்துவரும் தொண்டு நிறுவனத்தினர் இங்கிருந்து யானைகளை அழைத்துச்செல்லக் கூடாது என்று கூறினர். அப்போது வனத்துறையினர் இங்கிருக்கும் யானைகளை அழைத்துச்சென்று திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்புமையத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது என்று கூறி நீதி மன்ற உத்தரவு ஆணையையும் காண்பித்தனர்.

அப்போதும் வனத்துறையினருக்கும், அங்கிருந்த ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு வழியாக தொண்டு நிறுவனத்தின் ஊழியர்களை வனத்துறையினர் சமாதானப்படுத்தி யானைகளை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால் யானைகள் லாரியில் ஏறாமல் அடம்பிடித்தது, அவைகள் இருக்கும் செட்களுக்கே ஓடியது. இதனால் வனத்துறையினரால் அந்த யானைகளை லாரியில் ஏற்றமுடியவில்லை. எனவே  இங்கிருக்கும் யானைகளை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றி திருச்சிக்குகொண்டு செல்ல கோவை மாவட்டம் டாப்சிலிப்பில் இருந்து பயிற்சி பெற்ற யானை பாகன்களை இங்கு வரவழைத்துள்ளனர்.

பயிற்சி பெற்ற யானைபாகன்கள் வந்தால்தான் இவைகளை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றமுடியும் என்று வனத்துறையினர் கூறுகின்றனர் டாப்சிலிப்பில் இருந்து பயிற்சிபெற்ற யானை பாகன்கள் வரும் வரையில் வனத்துறையினர், கால் நடை மருத்துவக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் யானைகள் வளர்க்கப்படும் இடத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

Related Stories: