பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்க மன்மோகன் சிங்கிடம் அரசு யோசனை கேட்க வேண்டும்: ப.சிதம்பரம் டுவிட்

டெல்லி : தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 87-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி பதிவிட்டுள்ள டுவிட்டில், டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு டெல்லியில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர்  ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தினர்கள் உதவியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறியும், அவரை புகழ்ந்தும் பதிவிட்டுள்ளார்.

சிதம்பரம் தனது டுவீட்டில், மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் 100 ஆண்டுகளுக்கும் வாழ வாழ்த்துகிறேன். மன்மோகன் சிங்கின் யோசனைகளை கேட்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து மீட்கும் சரியான வழியை ஒருவரால் காட்ட முடியும் என்றால், அது மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும் என்றும் தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்றும்  பொருளாதார சரிவிற்கான முக்கியமான காரண காரணி என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் அரசு செயல்பாடுகளில் இருக்கும் அடிப்படை தவறு.

தேவையில் உள்ள குறைபாடு, வேலைவாய்ப்பு, சம்பளம், வாய்ப்புக்கள் ஆகியவற்றின் வளர்ச்சி மீதான அவநம்பிக்கை ஆகியன பெரிய பிரச்னையாக உள்ளது என்று ப.சிதம்பரம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  பஞ்சாப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டில் படித்த பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், 90 களில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: