அண்ணா பல்கலை. பாடத்தில் பகவத்கீதை: சமய நூலாக பார்க்காமல், பண்பாட்டு நூலாக பார்ப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து

சென்னை: இன்ஜினியரிங் கல்விக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்ப கல்விக்கான உயர் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்தல், மேம்படுத்துதல் பணிகளை  மேற்கொண்டு  வருகிறது. ஏஐசிடிஇ வடிவமைக்கும் பாடத்திட்டத்தை இன்ஜினியரிங் கல்விக்கான உயர் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை பல்கலைக்கழக  நிர்வாகமே  வடிவமைக்கிறது. இந்நிலையில் 2019 ஜூன் மாதம் ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்த மாணவர்களுக்கு பாடத்திட்டம் சாராத 32 பாடங்களில் 3 பாடங்களை விருப்பப்பாடமாக தேர்வு செய்து  3வது, 4வது, 5வது செமஸ்டரில் படிக்க வேண்டும் கூறியிருந்தது. சமுதாயத்தில் தொழில்நுட்பகல்வி, மதிப்புகள் மற்றும் தர்மம், தர்மமும் சிறந்த வாழ்க்கை முறையும், புகைப்படம், வீடியோ எடுத்து ஆவணப்படுத்துதல் என 32 பாடங்கள் அந்த  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி, ஸ்கூல் ஆப் ஆர்க்டெக்சன் அன்ட் பிளானிங், அழகப்பா காலேஜ் ஆப் இன்ஜினியரிங், குரோம்பேட்டையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி  ஆகிய 4 கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பாடப்பிரிவு வாரியாக விருப்ப பாடங்களை தேர்வு செய்தனர். அதில் பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்) மாணவர்கள் மொத்தமுள்ள 12 பாடங்களில் தத்துவவியல் பாடத்தை  தேர்வு செய்தனர். தத்துவியல் பாடத்தின் 5வது யூனிட்டில் ‘‘அறிவே ஆற்றல்’’ என்ற தலைப்பில் நம்முடைய ஆற்றலை உணர்வது தொடர்பாக கீதையில் கூறப்பட்டுள்ளவை, மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அர்ஜூனனுக்கு கிருஷ்ணரின்  உபதேசங்கள் ஆகியவை கொண்ட பகவத்கீதையை பாடமாக உள்ளது.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகம் திடீரென்று பகவத்கீதையை பாடமாக கொண்டு வந்ததற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது எனவும், மதச்சார்பற்ற நாட்டில் திட்டமிட்டு  பாடத்திட்டத்தில் மத விஷயங்களை சேர்ப்பதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர்,  எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்ந்திருந்தால் வரவேற்பதாக தெரிவித்தார். பகவத் கீதையை சமய நூலாக பார்க்காமல்,  பண்பாட்டு நூலாக பார்ப்பதாகவும் தெரிவித்தார். உயர் கல்வியில் மதத்தை புகுத்துவதாக கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

துணை வேந்தர் சூரப்பா விளக்கம்:

இந்நிலையில், கீதை தொடர்பான விஷயங்கள் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்தார். அதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஏஐசிடிஇயின்  புதிய பாடத்திட்டத்தின்படி, 32 பாடங்களை பரிந்துரைத்துள்ளது. மாணுடவியல், சமூகவியல், கலை சார்ந்தவை அந்த பட்டியலில் இருந்தது. இன்ஜினியரிங் படிக்கும்  மாணவர்கள் பிற விஷயங்கள் தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பது  ஏஐசிடிஇயின் நிலைப்பாடு. மாணவர்கள் மீது மதத்தையோ, கீதையையோ, பிற விஷயங்களையோ திணிக்கவில்லை. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு எதுவுமில்லை. ஏஐசிடிஇ வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளவற்றை அண்ணா  பல்கலைக்கழகம்  பின்பற்றியுள்ளது என்றார்.

Related Stories: