இருமாநில நதிநீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை: திருவனந்தபுரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி-கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். தமிழகம், கேரளா இடையே பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உள்பட நதிநீர்  பிரச்னைகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக  பலமுறை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சுமூகத்  தீர்வும் ஏற்படவில்லை. இந்த  நிலையில் நதிநீர் பிரச்னைகளில் தீர்வு ஏற்படுத்துவற்காக இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த கேரளாவுக்கு, தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கேரள அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இரு மாநில  முதல்வர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் இன்று மதியம் 3 மணியளவில் நடக்கிறது.

கேரள அரசு சார்பில், கேரள முதல்வர் பினராய் விஜயன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, 2 மாநில நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் ஜெயராமன், தலைமை செயலர் சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து  கொள்கின்றனர்.

இதில் பங்கேற்ற இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு காலை புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு அதிமுக சார்பிலும், அங்குவாழும் தமிழர்கள் சார்பிலும் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, இரு மாநில  முதல்வர்களும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்தினர். தொடர்ச்சியாக மதியம் பேச்சுவாத்தை நடைபெறவுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது, கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, பரம்பி குளம்-ஆழியாறு, ஆனை மலையாறு, பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் விடுவது ஆகிய  பிரச்சனைகள் தமிழகம்-கேரள மாநிலங்களுக்கு இடையே உள்ளன. குமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது உள்பட பிரச்சனையும் உள்ளது.

 

பரம்பிகுளம் - ஆழியாறு திட்டம்; நீராறு - நல்லாறு திட்டம்; புதிய நீர் மின் திட்டம்; சிறுவாணியில் கூடுதல் நீர் வினியோகம்; கேரளாவில் வீணாக கடலுக்கு செல்லும் நீரை தமிழகத்திற்கு திருப்புதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு  மாநில முதல்வர்களும் பேசவுள்ளனர். நீர் பிரச்னை தொடர்பாக முதல் முறையாக இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசியதால் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Related Stories: